திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வாடகை கட்டடத்தில் மறைந்திருக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருக்கோவிலுார் வரலாற்று சிறப்பு மிக்க நகரம்.தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் தாய் வானமாதேவி பிறந்த ஊர். இப்படி ஆற்றங்கரை நாகரிகத்தின் உச்சமாக திருக்கோவிலுார் விளங்கியது. இவற்றுக்கெல்லாம் கல்வெட்டுச் சான்றுகளும், நினைவிடங்களும், தொல்லியல் ஆய்வில் கிடைத்த அகழாய்வு பொருட்களும் உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தனை உண்மைகளையும் உலகத்திற்கு வெளிக்கொணரும் வகையில் கடந்த 1994ம் ஆண்டு தொல்லியல் துறை சார்பில் நகரில் ஆறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று கீழடியில் கிடைத்திருக்கும் பல பொருட்கள் அன்றே திருக்கோவிலுாரில் கிடைத்திருக்கிறது. குறிப்பாக சங்ககால செங்கல், சுடுமண் குழாய், சுடுமண் பானைகள், குடுவைகள், காதணி, பொம்மைகள், புகை பிடிப்பான் கருவி, வட்டச் சில்லுகள், ரவுலட் ஓடுகள், குறியீடுகள் கொண்ட ஓடுகள் உள்ளிட்ட அரிய பல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கல்வெட்டுக்களின் தகவல்கள் அடங்கிய பொருட்களைக் கொண்டு திருக்கோவிலுார், கீழையூர், கடலுார் மெயின் ரோட்டில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் 31 ஆண்டுகளுக்கு முன்பு அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இது எப்பொழுதும் பூட்டியே கிடக்கும். இந்த அருங்காட்சியகம் இருப்பது பலருக்கும் தெரியாது. அருங்காட்சியகத்திற்கான பெயர் பலகையும் மறைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் காப்பாளர் சென்னையில் இருப்பதால், எப்போழுது வருவார், திறப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். நமது கலாச்சார, பாரம்பரியத்தின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கலைக்கூடமான அருங்காட்சியகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டி, நமது தொன்மை, நாகரீகம், அரசியல், தமிழ் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் கபிலர் குன்றை புனரமைத்து, சங்கப் புலவன் கபிலனின் பெருமையை பறைசாற்றும் வகையில், அரைகுறையாக அவசரத்தில் கட்டப்பட்ட நினைவுத்துாணை செம்மைப்படுத்தி, பூங்காவை ஏற்படுத்தி கபிலரின் நினைவு வளாகத்தை கட்டுவதுடன், தற்கால நடைமுறைக்கு ஏற்ப கபிலர் குன்றை மையமாக வைத்து செல்பி பார்க் அமைக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் கோரிக்கை. விரிவாக்கம் செய்யப்பட்ட நகர்ப்பகுதியில் பூங்கா, கோவில் மற்றும் பொது பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில், அந்த இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழனின் தொன்மையான நாகரிக சிறப்பை விளக்கும் வகையில் சமீப காலங்களில் பல்வேறு அருங்காட்சியகங்களை அரசு நிறுவி நாட்டிற்கு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், திருக்கோவிலுாரில் மறைந்து கிடக்கும் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்டி மாணவர்களும், எதிர்கால சந்ததிகளும் நம் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோவிலுாரில் அமையும் அருங்காட்சியகம் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் ஏக்கமாக உள்ளது.