உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து... பாதிப்பு; சாலைகள் குறுகியதால் மக்கள் அவதி

ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து... பாதிப்பு; சாலைகள் குறுகியதால் மக்கள் அவதி

திருக்கோவிலுாரில் உள்ள சாலைகளில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அங்குள்ள தெற்கு வீதி, சன்னதி வீதி, கடைவீதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் சாலையை குறுக்கிவிட்டன. குறிப்பாக சன்னதி வீதியில், உலகளந்த பெருமாள், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார் உள்ளிட்ட வாகனங்கள், சாலையில் செல்ல முடியாத அளவிற்கு இரு பக்கமும், 15 அடிக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் மற்றும் நில அளவை துறை பல தடவை சாலையை அளவீடு செய்தது. ஆனால் அதற்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தெற்கு வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு தெருக்களிலும், இதே நிலை தான் நீடிக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சன்னதி வீதியில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையுடன் கூடிய கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல், அந்த நிதி வீணடிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, செவலை சாலையில் தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி கடைகளின் ஆக்கிரமிப்பு மிக அதிக அளவில் உள்ளது. இதனை அகற்ற கோர்ட்டும் அடிக்கடி ஆணை பிறப்பிக்கிறது. ஆனாலும், வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல், நகராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருக்கோவிலுார், கீரனூர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்களுக்கு போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், இந்த 'போலி' விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளது. அதனாலேயே கடந்த பல ஆண்டுகளாக, ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அகற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டு நீடித்து கொண்டே வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து குறிப்பிட்ட பகுதிகளில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி வருவாய்த்துறை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை