வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ரயில் பாதை விரைவில் அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில், சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி வரை,16 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை திட்ட பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கின. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேம்பாலம் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி, ரூ.116.6 கோடி மதிப்பில் நடந்தது. சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. இந்நிலையில் கடந்த, 2023 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி ரயில் நிலையத்தை மாடூர், நிறைமதி கிராம பகுதிக்கு மாற்ற கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் சார்பில், தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ரயில்வே நிர்வாகம் மறுப்பு
அதற்கு மறுப்பு தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், ஆய்வு நடத்தி, ஏற்கனவே தேர்வு செய்த கள்ளக்குறிச்சி நகரம், தியாகதுருகம் சாலையில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.மேலும் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை, உளுந்துார்பேட்டைக்கு புதிய ரயில் பாதை திட்ட பணிகள் துவங்க உள்ளதால் திட்டமிட்டபடி, நகரப்பகுதியில் தான் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே திருப்பி அனுப்பிய, ரூ.68.90 கோடி நிதியை, அப்படியே பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வரை, ரயில் பாதைக்கு தேவையான பணிகளை விரைந்து முடிக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக, மாவட்ட நிர்வாகத்திற்கு தென்னக ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து பொற்படாக்குறிச்சியிலிருந்து இந்திலி கிராமம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகர பகுதி, தியாகதுருகம் சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் எதிரே ரயில்வே அதிகாரிகள் அளவிட்டு கல் நட்டனர். மேலும், அப்பகுதியில் வணிகர்கள், குடியிருப்பு வாசிகளுக்கு இடத்தை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.இதில் ஒரு சிலர் இடத்தை காலி செய்து வெளியேறினர். இதனால் விரைவில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அத்துடன் பணிகள் மந்தமாகின. அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில் சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் தண்டவாளங்கள், பாலங்கள் பாதுகாப்பு குறித்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, துணை கோட்ட மேலாளர் சிவலிங்கம், துணை செயல்பாட்டு மேலாளர் சரவணன் குமார், ரயில்நிலைய அலுவலர் ராகேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இந்நிலையில், தண்டவாளத்தின் தரம், வலிமை, அதிர்வுகள், பாலங்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை சோதிப்பதற்காக, சின்னசேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை, ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள நகர மக்கள், விரைந்து கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையத்தை அமைத்து, திருவண்ணாமலை, உளுந்துார்பேட்டைக்கும், புதிய ரயில்பாதை திட்டப் பணிகளை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ரயில் பாதை விரைவில் அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.