உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழமையான கட்டடத்தில் உளுந்துார்பேட்டை காவல் நிலையம் ரூ.2.86 கோடி ஒதுக்கியும் வருவாய்துறையால் இழுபறி

பழமையான கட்டடத்தில் உளுந்துார்பேட்டை காவல் நிலையம் ரூ.2.86 கோடி ஒதுக்கியும் வருவாய்துறையால் இழுபறி

கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது விருத்தாசலம் உட்கோட்டத்திற்குட்பட்ட உளுந்துார்பேட்டையில் 1932ம் ஆண்டிற்கு முன் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் சப் இன்ஸ்பெக்டர் அலுவலகமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு செயல்படத் துவங்கியது.தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டு பிறகு கடந்த 1993ம் ஆண்டு முதல் திருக்கோவிலுார் உட்கோட்டத்திற்குட்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அலுவலகமாக செயல்பட துவங்கியது.பின், 1995ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட துவங்கியது. அதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட துவங்கியது.பின், 2005ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உளுந்துார்பேட்டை உட்கோட்டம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, எடைக்கல் காவல் நிலையங்கள் இருந்து வருகிறது.உளுந்துார்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்டு 42 கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. காவல் நிலையம் இன்னமும் அதே பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. 90 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கட்டடம் தற்போது பாழடைந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால் நிலையத்தில் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் போலீசார் சிரமம் அடைகின்றனர்.காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் வேண்டும் என போலீசார் மற்றும் பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போலீஸ் குடியிருப்பு ஆகியவற்றை ஒருங்கி ணைந்த இடமாகக் கொண்டு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கு இடம் வழங்கும்படி வருவாய்த் துறைக்கு காவல் துறை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வருவாய்த் துறையினர் கண்டுகொள்ளவில்லை.நீண்ட இழுபறிக்குப் பின், கடந்த சில மாதங்களுக்கு முன் காவல் நிலையம் கட்டுவதற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே 80 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் காவல் நிலையம் கட்டுவதற்காக 2.86 கோடி ரூபாய் நிதியை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அரசு ஒதுக்கீடு செய்தது.ஆனால், அந்த இடத்தை வருவாய் துறையினர் அளவீடு செய்து வழங்குவதில் காலம் கடத்தி வருகின்றனர்.இதனால் உளுந்துார்பேட்டையில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்டுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தற்போதைய பாழடைந்த காவல் நிலைய கட்டடத்தின் நிலை கருதி புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகளை துவங்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ