மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, , கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை, மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கன அடியில் 590 மில்லியன் கன அடிக்கு நிரம்பியது. அணை பாதுகாப்பு கருதி, உபரி நீர் புதிய ெஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்பட்டது.இந்நிலையில், நேற்று மதகு வழியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பாசன மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் பிரபு, விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.வரும் பிப்ரவரி 25ம் தேதிவரை 82 நாட்களுக்கு பழைய பாசனம் வழியாக விநாடிக்கு 15 கன அடி தண்ணீரும், புதிய பாசனம் வழியாக விநாடிக்கு 60 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.இதன் மூலம் பழைய பாசனத்தை சேர்ந்த பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலுார், உடையநாச்சி, கூத்தக்குடி, பானையங்கால், கொங்கராயபாளையம் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த 1,243 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.அதேபோல், புதிய பாசனத்தைச் சேர்ந்த அகரக்கோட்டாலம், அணைகரைக்கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர் ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த 4,250 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.