உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்வது எப்போது?: மர்ம நபர்களின் தொடர் அட்டூழியத்தால் மக்கள் அச்சம்

திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்வது எப்போது?: மர்ம நபர்களின் தொடர் அட்டூழியத்தால் மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அத்தியூரை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி செல்வி, 48; இவர், கடந்த ஜூன் 1ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மொட்டைமாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்து, 44 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.42 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.நாகல்குடி கிராமத்தை சேர்ந்த பாவாடை, 70; என்பவர், கடந்த 30ம் தேதி இரவு தனது மனைவியுடன் வீட்டிற்கு வெளியே துாங்கினார். நள்ளிரவில் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.அவிரியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜா (எ) முத்துராஜா, 39; என்பவரது குடும்பத்தினர், கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டி, சாவியை மறைவாக வைத்து விட்டு வெளியே சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்ட பகலிலேயே வீட்டிற்குள் புகுந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1,500 பணத்தை திருடி சென்றனர்.சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன், 70; இவர் கடந்த 2ம் தேதி இரவு மனைவி பொன்னம்மாளுடன் வீட்டினுள் துாங்கினார். 3ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, இருவரையும் அறைக்குள் அடைத்தனர். பின்பு, பீரோவில் இருந்த 211 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.வரஞ்சரம் அடுத்த வடபூண்டி கிராமத்தை சேர்ந்த குணவேல் மனைவி செல்வகுமாரி, 25; கடந்த 2ம் தேதி இரவு வீட்டில் துாங்கினார். நள்ளிரவு 12.30 மணிக்கு, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், செல்வகுமாரி கழுத்தில் அணிருந்த 3 சவரன் தங்க செயினை அறுக்க முயற்சித்தார். சுதாரித்த எழுந்த செல்வகுமாரி, செயினை பிடித்துக்கொண்டார். இதில், செயின் அறுபட்டு, 11 கிராம் தங்க செயினுடன் மர்ம நபர் தப்பியோடினார்.இது தவிர மாவட்டத்தில் சமீப காலமாக பணம், நகை மற்றும் பைக் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பட்ட பகலில் வீடு புகுந்து திருடுவதும், கத்தியை காட்டி மிரட்டி, வயது முதிர்ந்த தம்பதிகளை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.எனவே, மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ரோந்து பணியை தீவிரப்படுத்தி, திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை கைது செய்ய மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ