கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? க.மாமனந்தல், ரோடுமாமாந்துார் மக்கள் எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பல்வேறு பணிகளுக்காக தினமும் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரே செல்லும் வழியில் 5 கி.மீ., தொலைவில் க.மாமனந்தல் கிராமம் உள்ளது. இதனால், கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்ல குறுகிய வழியாக 2 கி.மீ., தொலைவில் கோமுகி ஆற்றை கடந்து ரோடுமாமந்துார் வழித்தடத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக கோமுகி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றினுள் இறங்கி செல்ல வேண்டும். மேலும், விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த விளைபொருட்கள், செங்கல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை டிராக்டர் டிப்பர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் ஏற்றி கோமுகி ஆற்றை கடந்து எடுத்து செல்கின்றனர். பாலம் இல்லாததால் கரடு, முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். பருவ மழைக்காலங்களில் கோமுகி அணை திறக்கும்போது, ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும். இதனால், கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதில் செல்ல முடியாது. மாறாக சாலை வழியாக 5 கி.மீ., தொலைவிற்கு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. ஆற்றில் தண்ணீர் ஓடினாலும், நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்படும் பொதுமக்கள், ஆற்றினை ஆபத்தான முறையில் இடுப்பளவு நீரில் கடந்து செல்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். எனவே, போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில், கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் கட்டாயம் க.மாமனந்தல் - ரோடுமாமாந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.