திருக்கோவிலுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.திருக்கோவிலுார் நகராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. கீரனூர், அரும்பாக்கம், வீரட்டகரம் என பல்வேறு கிராமங்களை இணைக்கும் அளவிற்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது.ஆனால் இங்கு கால மாறுதலுக்கு ஏற்ப விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டு அரங்கம் எதுவும் கிடையாது.இப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் அப்பள்ளி மாணவியர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில், இந்த விளையாட்டு மைதானத்தில் நுழைவு வாயில் பூட்டப்பட்டே கிடக்கிறது.இதனால் காலை, மாலை நேரங்களில் மட்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பரந்த அளவிலான விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:சந்தப்பேட்டை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் அருகில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி நிர்வாகம் விளையாட்டு அரங்கை உருவாக்க வேண்டும். அப்படி இல்லையெனில், வேறு வசதியான இடத்தை தேர்வு செய்து அரங்கம் அமைக்க வேண்டும்.துணைமுதல்வர் உதயநிதி ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அதனால் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.