மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
14-Nov-2024
கள்ளக்குறிச்சி: மாவட்ட தலைமையிடமான கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, தாலுகா காவல் நிலையம் துவங்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவங்கி 5 ஆண்டுகளாகிறது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் அரசு துறையின் பல்வேறு மாவட்ட அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புதிதாக கோர்ட்டுகள் துவங்கி செயல்படுகிறது.மாவட்ட தலைமையிட காவல் நிலையமான கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தற்போது கூடுதல் பணிச்சுமைகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் 73 போலீசார் என மொத்தம் 79 பேர் பணிபுரியும் வகையில் நியமனம் செய்யப்பட்டனர். இருப்பினும் காவல் நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். அதிலும் சிலர் எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் போன்ற மாவட்ட காவல் துறை உயர் அலுவலகங்களில் அயல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் கோர்ட் பணி, சம்மன் கொடுக்கும் பணி, அரசு மருத்துவமனை பாதுகாப்பு, விபத்து சான்று வாங்கும் பணி என ஒரு சிலர் சென்று விடுகின்றனர். ஒரு சிலர் விடுமுறையில் செல்கின்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர், வரஞ்சரம் காவல் நிலைய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.மாவட்டம் உதயமான பின் கலெக்டர் அலுவலகம் முன் நாள்தோறும் ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், விழிப்புணர்வு ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.மேலும், வாரம் தோறும் திங்கட்கிழமை குறைகேட்புக் கூட்டத்திற்கு பொதுமக்கள் பலர் மனு அளிக்க வருகின்றனர். மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இதற்கு கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் மட்டுமே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கள்ளக்குறிச்சி காவல் நிலையம், நகரம் (21 வார்டுகள்) மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 24 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பல்வேறு திருட்டு மற்றும் அவ்வப்போது கொலை, கொள்ளை, விபத்துகள் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.போலீஸ் பற்றாக்குறையால் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியாத சூழ்நிலையும் உள்ளது.கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரின் பணி சுமைகள் அதிகரித்துள்ளதால், காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, கிராம பகுதிகளை உள்ளடக்கி தாலுகா காவல் நிலையம் துவங்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-Nov-2024