உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி பணி... துவங்கப்படுமா?கச்சிராயபாளையத்தில் 15 ஆண்டுகளாக முடங்கிய திட்டம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி பணி... துவங்கப்படுமா?கச்சிராயபாளையத்தில் 15 ஆண்டுகளாக முடங்கிய திட்டம்

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இப்பகுதியில் கரும்பு சாகுபடி அதிகரித்ததால் கடந்த 1997ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 துவங்கப்பட்டது. இந்த ஆலை நாளொன்றுக்கு 2500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது. மின் பற்றாக்குறையைப் போக்கவும், விவசாயிகள் பயனடையும் வகையிலும், மாநிலத்தில் உள்ள 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 12 முதல் 18 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2ல் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, 78.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இங்கு அமைக்கப்படும் இணை மின் உற்பத்தி நிலையம் மூலம் தினமும் 15 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள 10 மெகா வாட் மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த மின் உற்பத்தி திட்டத்திற்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொகை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளின் கரும்பு தொகையிலும் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சடையம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மின் உற்பத்தி திட்ட பணிகளுக்கு முறையாக நிதி ஒதுக்காமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் துரு பிடித்து வீணாகி வருகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மின் உற்பத்தி நிலைய பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. பணிகளை நேரில் ஆய்வு செய்த அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் 2018-19ம் ஆண்டின் அரவைப் பருவத்ததிலேயே மின் உற்பத்தி நிலையம் செயல்பட துவங்கும் என உறுதி அளித்தனர். ஆனால், என்ன காரணங்களோ தெரியவில்லை, ஓரிரு மாதங்களில் மீண்டும் மின் உற்பத்தி நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவடையவில்லை. நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளதாலும் பெரும் பகுதியான தளவாட பொருட்கள் அதிகளவில் துருப்பிடித்து காணப்படுவதால் அதன் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகியதுடன், விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணமும் வீணாகியுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க., ஆட்சியிலாவது பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ