உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சட்டம், பொறியியல், வேளாண் கல்லுாரிகள் துவங்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சட்டம், பொறியியல், வேளாண் கல்லுாரிகள் துவங்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக இயங்கி வருகிறது. புதிய மாவட்டத்தில் இதுவரை அரசின் சட்டம், பொறியியல், வேளாண், வனம், மகளிர் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.கள்ளக்குறிச்சியில் கடந்த 2011ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. 2021ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லுாரியும் துவங்கி நடந்து வருகிறது.மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லுாரிகள், 3க்கும் மேற்பட்ட தனியார் கலைக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் மாவட்ட எல்லைப் பகுதியான வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணையில் கால்நடை மருத்துவக்கல்லுாரி திறக்கப்பட்டுள்ளது.இதற்காக 3 லட்சத்து 72 ஆயிரத்து 473 சதுரடி பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பிரமாண்ட கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அது சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழகத்திலேயே தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் விளைச்சலில் முன்னிலை பெற்றுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் அரசின் ஒரு மாடர்ன் ரைஸ் மில் உட்பட 250க்கு மேற்பட்ட அதிநவீன மாடர்ன் ரைஸ் மில்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் அரிசி அனுப்பப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் அரசின் இரண்டு சர்க்கரை ஆலைகள் மற்றும் ஒரு தனியார் சர்க்கரை ஆலை என 3 சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை உற்பத்தியும் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து விவசாய தொழில்கள் செழிப்பாக இயங்கி வருகின்றன.இவற்றை மையப்படுத்தி கள்ளக்குறிச்சியில் வேளாண் கல்லுாரி அமைக்கப்பட வேண்டும். அதேபோல் மாவட்டத்தில் கல்வராயன்மலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வன நிலங்கள் அதிகளவில் உள்ளன.எனவே, அதனையும் கருத்தில்கொண்டு மாவட்டத்தில் ஒரு வனக்கல்லுாரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றும் கலை அறிவியல், மருத்துவம் தவிர, இதுவரை அரசின் பிற கல்லுாரிகள் துவங்காமல் இருப்பது இம்மாவட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து ஆண்டு தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு செல்கின்றனர்.எனவே கல்லுாரி கனவை நினைவாக்கும் வகையில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கல்விக்கான முன்னுரிமை வழங்கி அரசின் புதிய சட்டம், பொறியியல், வேளாண், வனம் மற்றும் மகளிர் கல்லுாரிகளை அமைத்திட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி