உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இயற்கை சமநிலையை மீட்க மீண்டும் இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா? விலங்குகள் மனித மோதல் தவிர்க்க விவசாயிகள் கோரிக்கை

இயற்கை சமநிலையை மீட்க மீண்டும் இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா? விலங்குகள் மனித மோதல் தவிர்க்க விவசாயிகள் கோரிக்கை

திருக்கோவிலுார்: பரந்து விரிந்த வனங்களை வனத்தோட்ட கழகம் ஆக்கிரமித்து யூக்கலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் இயற்கை சூழல் மாறுபட்டு, விலங்கினங்கள் ஊருக்குள் புகும் அபாயத்தை தவிர்க்க மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முற்றிலும் விவசாயத்தையே நம்பி இருக்கும் நிலப்பரப்பு. இதில் திருக்கோவிலுார், சங்கராபுரம், பகண்டை கூட்டு சாலை, தியாகதுருகம் உள்ளிட்ட வன பகுதிகளில் உள்ள 7,000 ஹெக்டேர் வனங்களில் பெரும்பாலான பகுதியை வனத்தோட்ட கழகம் வனத்துறையிடமிருந்து குத்தகை அடிப்படையில் கைப்பற்றி இயற்கை காப்பு காடுகளை அழித்து குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுக்கும் யூக்கலிப்டஸ் மரங்களை பயிர் செய்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருக்கப்பட்டு வனங்களில் இருந்து விலங்குகள் வெளியேறி விவசாயிகளுக்கு பெரும் இன்னலாக உருவெடுத்து இருக்கிறது. வனங்கில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், மணிலா, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பாழ்படுத்துகிறது. கடந்த காலத்தில் காடுகளை ஒட்டி இருக்கும் கிளியூர், நத்தாமூர், குன்னத்தூர், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, பாடியந்தல் பகுதிகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்பொழுது ஊருக்கு மத்தியில் இருக்கும் நிலப்பகுதிகளுக்கும் வன விலங்குகள் படையெடுக்க துவங்கியுள்ளது. விவசாய நிலங்களில் ஒரு காலத்தில் உயிர் வேலியை அமைத்திருந்தனர். தற்பொழுது கம்பிவேலிகளாக மாற்றப்பட்டுள்ளது. வனத்தோட்டக் கழகம் வனத்தில் இருந்த புதர்களை அழித்ததால், குள்ளநரி உள்ளிட்ட உயிரினங்கள் தங்குவதற்கு இடம் இன்றி வயல்வெளிக்கு படையெடுத்தனர். அப்பொழுது விவசாய நிலத் தில் பயன்படுத்தும் களைக்கொல்லியால் இறந்த நண்டு, நத்தைகளை உண்டு குள்ள நரியினமே அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுதெல்லாம் நரியின் கூக்கூறலைகூட கேட்க முடிவதில்லை. எனவே மயில் முட்டைகளை வேட்டையாடும் நரிகள் இல்லாததால் மயில் அதிகரித்து விட்டது. மான்களின் இனப்பெருக்கமும் இரட்டிப்பாகி விட்டது. மான்கள் ஊருக்குள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. காட்டு பன்றிகள் தங்க இடமின்றி அடர்த்தியான கரும்பு, மக்காச்சோள பயிர் பரப்பை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டது. வனவிலங்குகள் விளை நிலங்களை வாழ்விடமாக மாற்றிக் கொள்ள இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வனத்துறை, வனத்தோட்டக் கழகத்திடமிருந்து குறிப்பிட்ட வனப்பரப்பை மீண்டும் கைப்பற்றி இயற்கையான புதர் மண்டிய காப்பு காடுகளை உருவாக்கி அப்பகுதிக்குள் வன விலங்குகளை பாதுகாப்பதன் மூலமும், வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதையும், கட்டுக்கடங்காத இனப்பெருக்கத்தையும் தடுக்க முடியும். மின்வேலி அமைக்கும் விவசாயிகளின் சட்ட விரோத நடவடிக்கைக்கும் தீர்வு கிடைப்பதுடன், பல உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படும். எனவே இயற்கை சமநிலையுடன் அனைத்து உயிரினங்களும் பல்கி பெருகாமல், விலங்குகளுடன் மனித மோதல் தவிர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ