கள்ளக்குறிச்சியில் பழுதடைந்த சி.சி.டி.வி., கேமராக்கள்... பராமரிக்கப்படுமா? குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் தாமதம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தலை நகராக தரம் உயர்ந்த பிறகு, அரசின் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள் நகர பகுதிக்கு வந்துள்ளன. மேலும், ஏராளமான துணி கடைகள், நகை கடைகள், காய்கறி மார்க்கெட், பள்ளி மற்றும் கல்லுாரிகள் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே உள்ளது. நகரப்பகுதியில் குடியேற வேண்டும் என்ற ஆர்வத்தால் நகர பகுதியில் நாளுக்கு நான் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப சமீப காலமாக குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சாலையில் செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடுதல், பஸ்சில் செல்பவர்களிடம் நகை, பணம் திருடுதல், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு திருடுதல், வீட்டை உடைத்து திருடுதல், பைக் திருட்டு என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் ஒரே மாதிரியான 'ஸ்டைல்' பின்பற்றுவர். இதனால், குற்றம் நடந்த விதத்தை கணித்து குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் எளிதில் கண்டறிந்தனர். இந்த நிலை தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. மதுபோதை, கஞ்சா போதைக்கு அடிமையாகும் பலர் தற்போது குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். தற்போதுள்ள சூழலில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவரை கண்டறிய சி.சி.டி.வி., கேமரா அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இதையொட்டி, நகரின் முக்கிய பகுதிகள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம், நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பில் 100க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறியலாம். சம்பவம் நடந்த சில நாட்களிலேயே கண்டறிவதன் மூலம் திருடு போன பணம், நகைகளை முழுமையாக மீட்கலாம். ஆனால், நகரின் மையப்பகுதியில் உள்ள கேமராக்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் வெளிப்புறங்களில் உள்ள கேமிராக்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. பராமரிப்பு செலவு அதிகம் என்பதாலும், 'ஸ்பான்சர்'களின் ஒத்துழைப்பு இல்லாததாலும் பல்வேறு சி.சி.டி.வி., கேமிராக்கள் காட்சி பொருளாக உள்ளன. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. காலதாமதமாக கண்டறியப்படும் நபர்களிடமிருந்து களவுபோன நகைகள், பொருட்களை பறிமுதல் செய்யவும் முடியாத நிலை உள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி நகரில் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ள கேமராக்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, தேவையுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.