தென்மேற்கு பருவ மழை நீரை சேகரிக்க திட்டப் பணிகள்... தீவிரப்படுத்தப்படுமா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கள்ளக்குறிச்சி, : தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை தீவிரப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தைஉயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் துவங்க உள்ள தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை பொழிய உள்ளது.இந்த தொடர் பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை வீணாகாமல் தடுத்து, அதனை முழுமையாக நிலத்தடியில் சேகரித்து, நீர்மட்டத்தை உயர்த்தினால் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை வரும் காலங்களில் எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.இதனால் இயற்கையில் கிடைக்கும் மழைநீரை, வீணாகாமல் முறையாக சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே, மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தனியார் கட்டடங்கள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் போதிய கட்டமைப்புகளை உருவாக்க கடந்த, 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. மாயமான கட்டமைப்புகள்
புதிய வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட அனுமதி அளிக்கும் போதே, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த கட்டாயப்படுத்தப் பட்டது. அரசு அலுவலகங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் முறையான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பபடவில்லை. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காணாமல் போய் விட்டன. அரசு அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்ட கட்ட மைப்புகளும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை.இந்த நிலையில் தான் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த பருவமழை நீரை முறையாக சேகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. விழிப்புணர்வு அவசியம்
இதன் அவசியத்தை உணர்ந்து, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, மாவட்டத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.மழைநீரை சேமித்து வைக்கும் கட்டமைப்பு களை உருவாக்கும் வகையில், 'ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்தாண்டே துவக்கி வைத்தார்.அதனால், மாவட்டத்தில் வீடுகள், அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பருவமழைக் காலங் களில் கிடைக்கும் நீரை முறையாக சேகரித்தாலே, குடிநீர் பஞ்சம் மற்றும் பற்றாக்குறையை எளிதாக தீர்க்க முடியும். ஆனால் மழைக்காலங்களில், நீரை வீணடித்து விட்டு, கோடைக்காலங்களில் குடிநீருக்காக காத்திருப்பதே, வழக்கமாகி விட்டது.அதனால், தற்போது பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்து வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும்,' என்றனர்.