பெண்ணிடம் ரூ.5.95 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த பொன்பரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி சந்தியா, 22; இவரது டெலிகிராம் எண்ணிற்கு கடந்த 14ம் தேதி, வீட்டிலிருந்தே வேலை செய்வது தொடர்பாக செய்தி வந்துள்ளது.அதிலிருந்த தொடர்பு எண்ணை சந்தியா தொடர்பு கொண்டார். மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ செய்ததற்கு, சந்தியாவின் வங்கி கணக்கிற்கு ரூ.200 வந்தது. அடுத்த கட்டமாக பணியை தொடர பணம் கட்ட வேண்டும் என மர்ம நபர்கள் கூறினர். அதனை நம்பிய சந்தியா 24 தவணைகளில் ரூ.5.95 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலமாக கட்டி, மர்மநபர்கள் கூறிய பணியை செய்தார். இணையதளத்தில் உள்ள சந்தியாவின் 'வேலட்'டில் இருந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்தியா அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.