மனு அளிக்க வந்த பெண் தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி, 35; இவர், நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.உடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்து மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர்.மனு விபரம்:கடந்த 2012ம் ஆண்டு கொங்கராயப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும், எனக்கும் திருமணம் நடந்து, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் சங்கர் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் துன்புறுத்துகிறார்.கணவர் குடும்பத்தினர் என்னையும், எனது மகன்களையும் கொலை செய்ய முயற்சித்ததால், தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். மகன்களின் பராமரிப்பிற்காக சொத்து எதுவும் கொடுக்காததால் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.உரிய விசாரணை செய்து, கொங்கராயப்பாளையத்தில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கவும், விவசாயம் செய்து கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.