உபரிநீர் திறப்பால் சாலை துண்டிப்பு 10 கி.மீ., சுற்றும் வாகன ஓட்டிகள் உயர்மட்ட பாலம் கட்டும் பணி முடிவது எப்போது?
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், விக்கிரமநல்லூர் பகுதியில் அரசாணிமங்கலம் -- வேடபாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, அரசாணிமங்கலம், காந்திகிராமம், மேனலூர் உள்ளிட்ட கிராமத்தினர் உத்திரமேரூர், செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனர்.விக்கிரமநல்லூர் பகுதியில் சாலை குறுக்கே உள்ள நரிமடை தரைப்பாலம் சேதமடைந்து இருந்தது. இதை அகற்றிவிட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஓராண்டுக்கு முன் துவங்கியது. இதற்கு பதிலாக, பாலத்தின் அருகே மாற்று பாதை அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வந்தன.தற்போது வரை பாலம் கட்டும் பணிகள் முழுமை பெறவில்லை. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.இதை தொடர்ந்து, ஏரியின் நரிமடை நான்கு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் வேகமாக செல்வதால், நேற்று முன்தினம் பாலத்தின் அருகே உள்ள மாற்றுப்பாதை சேதமடைந்து, மண் அரிப்பு ஏற்பட்டு சாலை தூண்டிக்கப்பட்டது.இதனால், அவ்வழியே போக்குவரத்து தடைபட்டு, அரசாணிமங்கலம், ஒட்டந்தாங்கள், மேனலூர் பகுதிவாசிகள் 10 கி.மீ., சுற்றிக்கொண்டு உத்திரமேரூர் வந்து செல்கின்றனர்.எனவே, அரசாணிமங்கலம் - வேடபாளையம் சாலையில், விக்கிரமநல்லூர் பகுதியில் கட்டப்படும் பாலத்தை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.