அபுதாபி விமானத்தில் கோளாறு ஒரு நாள் தாமதமாக இயக்கம்
சென்னை, சென்னையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு செல்லும் 'எத்தியார்ட் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட தயாரானது. இதில் 175 பேர் இருந்தனர்.விமானம் 'ரன்வே'யில் ஓடத் துவங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தை அவசரமாக நிறுத்தி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தந்தார். இழுவை வண்டிகள் வரவழைக்கப்பட்டு, விமானம் இழுத்து செல்லப்பட்டது.பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர். காலை 6:00 மணியாகியும் பழுது சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணியர் இறக்கப்பட்டனர்.அவர்கள் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பின் விமானம் தாமதமாக இன்று புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.