ஊத்துக்காடு கிராமத்தில் அம்மன் ஊர்வலத்திற்கு மறுப்பு
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமக விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் இரவு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் அரசு சார்பில் வீடுகள் கட்டி குடியமர்த்தப்பட்டுள்ள 170 பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கும் காந்தி நகரில் சாமி வீதியுலா செல்ல சிலர் வலியுறுத்தினர். புதிய குடியிருப்பு பகுதிக்கு வீதியுலா செல்ல ஏற்கனவே தீர்மானிக்காமல் திடீரென செல்வது சரியல்ல எனக்கூறி, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. தகவல் அறிந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினர் இடையே பேச்சு நடத்தினர். பின் ஏற்பட்ட சமாதானத்தில் ஊத்துக்காடு பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.