உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக் வெடித்து தீ விபத்து 2 குழந்தை பலி; பெற்றோர் சீரியஸ்

பைக் வெடித்து தீ விபத்து 2 குழந்தை பலி; பெற்றோர் சீரியஸ்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 32. இவரது மனைவி மஞ்சுளா, 31. தம்பதிக்கு மிதுலன், 2, நவிலன், 1, என இரு ஆண் குழந்தைகள் இருந்தனர்.ஆந்திர மாநிலம், புத்துாரிலுள்ள தனியார் சட்ட கல்லுாரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டு, பகுதி நேரமாக தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.திருத்தணி டவுன் முருகப்பா நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில், சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து, குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று அதிகாலை, இந்த வீட்டின் தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று 'பைக்'குகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. அப்போது பெட்ரோல் 'டேங்க்'குகள் வெடித்து சிதறியதில், இவர்கள் தங்கியிருந்த முதல் தளம் வரை தீ பரவியது.இதைக் கண்ட பிரேம்குமார் - -மஞ்சுளா தம்பதி, இரு குழந்தைகளுடன் முதல் தளத்தில் இருந்து படிக்கட்டு வழியாக வெளியேற இறங்கினர். அப்போது, கரும்புகை சூழ்ந்து இருந்ததால், உள்ளே சிக்கி அலறினர்.சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய நால்வரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு, குழந்தை நவிலன் உயிரிழந்தார். அபாய கட்டத்தில் இருந்த மற்ற மூவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு, குழந்தை மிதுலனும் உயிரிழந்தார். பிரேம்குமார், மஞ்சுளா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில், தீ விபத்தில் மூன்று 'பைக்'குகள் எரிந்து நாசமாகின. தகவலின்படி வந்த திருத்தணி தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ