பெண் வெட்டி கொலை போதை கணவர் கைது
ஸ்ரீபெரும்புதுார்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, மாகரல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 42, இவரது மனைவி சுமதி, 39. இவர்கள், மரம் வெட்டும் தொழில் செய்து வந்தனர்.இருவரும், ஐந்து மாதங்களாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலம் ராஜலட்சும் நகரில் தங்கி, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், நேற்று காலை வேலுவின் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்போர் வந்து பார்த்தபோது, சுமதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டனர். பக்கத்தில் வேலு மதுபோதையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், நேற்று முன்தினம் இரவு, வேலு வீட்டில் மது அருந்திய போது, மனைவி சுமதியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மரம் வெட்டும் கத்தியால் சுமதியின் தலையில் வேலு வெட்டியுள்ளார்.இதில், பலத்த காயம் அடைந்த சுமதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.வேலுவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.