பாலுாட்டும் பெண்கள் அறை திறக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 2015ல், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பாலுாட்டும் பெண்களுக்கான அறை திறக்கப்பட்டது.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பாலுாட்டும் பெண்கள் இந்த அறையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த அறையின் வெளிப்பகுதி சுவரில், எழுதப்பட்டு இருந்த, பாலுாட்டும் பெண்கள் தனி அறை' என்ற எழுத்துக்கள் நீலநிற வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலுாட்டும் அறை முறையாக திறக்கப்படாமல் அடிக்கடி பூட்டி கிடப்பதால், பெண்கள் மறைவான இடத்தை தேடி அலைய வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே, அறையின் சுவரில் அழிக்கப்பட்டுள்ள பாலுாட்டும் பெண்கள் தனி அறை' என்பதை, மீண்டும் தெளிவாக எழுதவும், அறையை முறையாக திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலுாட்டும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், பாலுாட்டும் பெண்கள் அறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.