கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் கூலிங் பெயின்ட் அடிக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 - 728ம் ஆண்டில், 'சான்ட் ஸ்டோன்' எனப்படும் மணற்கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சில வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், கைலாசநாதர் கோவில் உட்பிரகாரத்தில் பதிக்கப்பட்டுள்ள கருங்கல் தரையில் சூடு தாங்க முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முதியோர், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாமல், தீமிதித்ததைப் போல உள்ளது என ஓட்டம் பிடிக்கின்றனர்.இதனால், பக்தர்களின் பாதங்களில் கொப்பளம் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் பிரகாரத்தில் தேங்காய் நாரில் உருவாக்கப்பட்ட மிதியடி அல்லது 'கூலிங் பெயின்ட்' அடிக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.