உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் திருப்பணி தொடர்பாக அறிவிப்பு பதாகை வைக்க சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் அறிவுறுத்தல்

கோவில் திருப்பணி தொடர்பாக அறிவிப்பு பதாகை வைக்க சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபையின் மதிப்பீட்டு குழு, அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில் நேற்று ஆய்வு செய்தது. குழுவின் உறுப்பினர்களான அருண்குமார், உதயசூரியன், கருமாணிக்கம், சதன் திருமலைகுமார், சின்னதுரை, ராமச்சந்திரன், மணியன், வெங்கடேஸ்வரன் ஆகிய எட்டு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.முதலில், ஏகாம்பரநாதர் கோவிலில் 24.5 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் திருப்பணிகளை இக்குழு பார்வையிட்டது. அங்கு நடக்கும் திருப்பணி பற்றி ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.அப்போது, கோவில் பக்தர்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர், கோவிலில் நடக்கும் திருப்பணி தொடர்பாகவும், உபயதாரர்கள் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என குழு தலைவர் காந்திராஜனிடம் புகார் மனு அளித்தனர்.இதையடுத்து, செங்கழுநீரோடை வீதியில், 4.6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நேரு மார்க்கெட் பணிகளையும், கிழக்கு ராஜவீதியில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்தனர்.மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பணியையும், அய்யம்பேட்டையில் கலைஞர் கனவு இல்லம் திட்ட வீடுகளையும் இக்குழு பார்வையிட்டது.கீழம்பியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் நெல் இயந்திர நடவு பணிகளையும் குழு ஆய்வு செய்தது. பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த இக்குழு, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தை ,கலெக்டர் அலுவலகத்தில் நடத்தியது.இதில், மாவட்டத்தில் நடக்கும் முக்கிய திட்ட பணிகளுக்கான பட்ஜெட், கூடுதல் நிதி தேவைப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், 82 பயனாளிளுக்கு நலத்திட்ட உதவிகளை, குழு தலைவர் காந்திராஜன் வழங்கினார். இதில், கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எ.ல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆய்வுக்கு இடையே, குழுவின் தலைவர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத் துறையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடக்கின்றன. ஏகாம்பரநாதர் கோவிலில், திருப்பணிக்கு செலவிடும் தொகை, உபயதாரர்கள் விபரம் ஆகியவற்றை அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதுபோல, உபயதாரர் பெயர், செலவிடும் தொகை ஆகியவை அடங்கிய அறிவிப்பு பதாகை வைக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு, கூடுதல் தொகையை ஒதுக்க, நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை, மதிப்பீட்டுக் குழு சந்தித்து வலியுறுத்தும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் விடுதியில், வார்டன், சமையலர், பாத்திரம் இல்லை என பல புகார்கள் வருகின்றன. அவற்றையும் ஆய்வு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

19ல் 10 பேர் ஆப்சன்ட்!

சட்டசபை மதிப்பீட்டுக் குழுவில் தலைவர் உட்பட 19 பேர் உள்ளனர். இதில், தலைவர், எட்டு உறுப்பினர்கள் மட்டுமே நேற்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மீதமுள்ள 10 பேர் ஆப்சன்ட் ஆகினர்.கடந்த ஆகஸ்ட் மாதம், பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக்கு வந்தபோது, 18 பேரில் 9 பேர் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது. சட்டசபையின் பல்வேறு குழுக்கள் ஆய்வுக்கு வரும்போது, உறுப்பினர்கள் பலரும் வராமல் இருப்பது வாடிக்கையாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !