பராமரிப்பின்றி காஞ்சி மாநகராட்சி பூங்கா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பேராசிரியர் நகர்- 2ல், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 41.60 லட்சம் ரூபாய் செலவில், 2018ம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது.இப்பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்ட சிமென்ட் கல் சாலை, சிறுவர்களுக்கான ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு சாதனங்களும் செயற்கை நீரூற்று, ஓய்வு எடுக்க இருக்கை வசதி, கழிப்பறை, இரவில் ஒளிரும் மின்விளக்குகள், அழகிய புல்தரை, அலங்கார மலர்செடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.இப்பூங்காவை பேராசிரியர் நகர் 2 பகுதியை மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு நகரில் வசிப்போரும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். சிறுவர்கள் மாலையிலும், விடுமுறை நாட்களிலும், விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், 2020ம் ஆண்டு கொரோனாஊரடங்கில் பூங்காவிற்கு பூட்டு போடப்பட்டது.பின், பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால், நடைபாதையில் செடி, கொடிகள் சீமை கருவேல மரங்கள் புதர் மண்டிஉள்ளன,செயற்கை நீருற்றில் அமைக்கப்பட்ட குழாய்களையும், கழிப்பறை கதவுகளையும், மின் விளக்குகளையும் சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.புதர் மண்டியுள்ளதால் பொதுமக்கள் பூங்காவிற்கு வருவதை தவிர்த்துவிட்டனர்.தற்போது பூங்காவை சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்துவது, பணம் வைத்து சூதாடுவது உள்ளிட்ட சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாயில் அமைக்கப்பட்ட பூங்கா, பொதுமக்களுக்கு பயன்பாடாமல் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், அப்குதியில் சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதாக பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர் நகர் 2 பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பராமரிப்பின்றி உள்ள பேராசிரியர் நகர் பூங்காவை ஆய்வு செய்து சீரமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.