திருக்கச்சிநம்பிகளுக்கு மண்டகபடி உத்சவம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பிகளுக்கு, ரங்கசாமிகுளம் அருகே உள்ள அஷ்டபுஜபெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், தனி கோவில் உள்ளது. இதனால், இத்தெருவிற்கு திருக்கச்சிநம்பி தெரு என அழைக்கப்படுகிறது.மாசி மாதம், திருக்கச்சிநம்பிகளுக்கு வருஷோத்ஸவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு வருஷோத்ஸவ உத்சவம் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில், திருக்கச்சிநம்பிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையும், மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இதில், ஒன்பதாம் நாள் உத்சமான நேற்று, மாலை 6:30 மணிக்கு, திருக்கச்சிநம்பிகள் காந்தி சாலை வழியாக ஆடிசன்பேட்டை செட்டி தெருவில் வீதியுலா சென்றார்.அங்கு சுவாமிக்கு மண்டகப்படி உத்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை, 6:00 மணிக்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாற்றுமறை உத்சவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாட்டினை, திருக்கச்சிநம்பிகள் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள், நிர்வாக அறங்காவலர் சதீஷ்குமார் மற்றும் அறங்காவலர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.