உத்திரமேரூரில் ஸ்கேன் இல்லாததால் செங்கை மருத்துவமனைக்கு பரிந்துரை
உத்திரமேரூர்,உத்திரமேரூரில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தினமும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம், தீக்காய சிகிச்சை ஆகிய உயர் சிகிச்சைகள் வழங்க போதிய வசதிகள் இல்லாமல் உள்ளது.தற்போது, உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் விபத்து, தீக்காயம் உள்ளிட்ட நேரங்களில் உடனே, சிகிச்சை அளிக்க முடியாததால், நோயாளிகளை செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அப்போது, சிகிச்சை அளிக்க கால தாமதம் ஏற்பட்டு, பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீப காலங்களாக இம்மருத்துவமனையில் தலை, எலும்பு ஆகிய இடங்களில், விபத்தில் ஏற்பட்ட உள்காயங்களை கண்டறிய, சி.டி., ஸ்கேன் செய்ய, தினமும் அதிகமானோர் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்களுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர்.ஆனால், நீண்ட துாரம் செல்வதற்கு தயங்கும் நோயாளிகள், உத்திரமேரூர் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு சென்று, 500 ரூபாய் கொடுத்து சி.டி., ஸ்கேன் செய்து கொள்கின்றனர்.மேலும், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல், ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர். எனவே, உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.