ஒரகடத்திற்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
சாலவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றிம், சாலவாக்கம் அடுத்து அன்னாத்துார், பொற்பந்தல், சித்தனக்காவூர், தண்டரை, பேரணக்காவூர், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், ஒரகடம் பகுதியில் உள்ள பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.பணியாளர்கள் கம்பெனிக்கு வந்து செல்ல வசதியாக, தொழிற்சாலைகள் வாயிலாக வேன் மற்றும் பேருந்து இயக்கப்பட்டாலும், ஒரகடத்தில் இருந்து, தொலைதுாரத்திலான சில கிராமங்களுக்கு அத்தகைய வசதி ஏற்படுத்தபடாமல் உள்ளது.இதனால், அப்பகுதிகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களிலும், அரசு பேருந்துகள் மூலமாகவும் பயணித்து, ஒரகடம் பகுதியில் உள்ள கம்பெனிகளுக்கு சென்றுவரும் நிலை உள்ளது.ஒரகடத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், வாலாஜாபாத் அல்லது செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், தொழிலாளர்கள் பலர் அலைச்சலுக்கு உள்ளாவதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை உள்ளது.எனவே, சாலவாக்கம் சுற்று வட்டார கிராமங்கள் வழியாக ஒரகடம் செல்ல நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.