அரவை இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி கை துண்டாகி, தலையில் அடிபட்டு பலி
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 48; சிறுதாமூரில் உள்ள தனியார் கல் அரவை தொழிற் சாலையில் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்.அவரது மனைவி பரமேஸ்வரியும், அதே தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு, ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகள் உள்ளனர்.தொழிற்சாலையில், இயந்திரத்திற்கு கற்கள் எடுத்துச் செல்லும் வகையில், இரும்பு சட்டகத்தால் அமைக்கப்பட்ட நகரும் பாதை உள்ளது. மோட்டார் வாயிலாக இதை இயக்க, பெல்ட் பொருத்தப்பட்டு உள்ளது.நேற்று காலை 9:00 மணிக்கு, கற்கள் அரவை பணியில் ஈடுபட்டிருந்த நாகப்பனின் வலது கை, எதிர்பாராதவிதமாக பெல்ட்டில் சிக்கியது.மோட்டாரை உடனடியாக நிறுத்த முடியாததால், தோள்பட்டை வரை இழுத்துச் சென்று, பின் வலது கை துண்டாகி விழுந்தது.அவர் சுதாரிப்பதற்குள், அவரது தலையும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே நாகப்பன் உயிரிழந்தார்.சாலவாக்கம் போலீசார்,நாகப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.மனைவி கண் முன்னே கணவர் கல் அரவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.