பணாமுடீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில், பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பணாமுடீஸ்வரர் கோவில் மற்றும் இக்கோவிலின் உபகோவில்களான கற்பக விநாயகர், ஆலடி விநாயகர், தட்சணாமூர்த்தி விநாயகர், அதிபதீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், விகட விநாயகர் கோவில்களின் திருப்பணி துவங்க உள்ளது.அதையொட்டி, இக்கோவில்களில் நேற்று பாலாலயம் நடந்தது. இதில், கோவில் செயல் அலுவலர் கதிரவன், ஆய்வாளர் அலமேலு, அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோவில்கள் அனைத்தும் உபயதாரர் நிதி மற்றும் திருக்கோவில் நிதி என, மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி துவக்கப்பட உள்ளது என, செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.