உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டிற்குள் கழிவுநீர் ‛ரிட்டர்ன் திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு

வீட்டிற்குள் கழிவுநீர் ‛ரிட்டர்ன் திருவள்ளுவர் தெருவினர் தவிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்த முடியவில்லை. வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் தொற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவினர் கூறியதாவது:எங்கள் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த இரு நாட்களாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், இரு நாட்களாக குளிக்காமல் உள்ளோம். இயற்கை உபாதையை கழிக்க, மாநகராட்சி பொது கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவுநீர் வீட்டிற்குள் ‛மேன்ஹோல்' வழியாக ‛ரிட்டர்ன்' ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை.வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்குவதால் தெருவிற்கும், வீட்டு வாசலுக்கும் இடையே மரப்பலகை வைத்து அதன் வாயிலாக வீட்டிற்கும், வெளியிலும் சென்று வருகிறோம். கழிவுநீர் தேக்கத்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இதேநிலை நீடித்தால், மாநகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன், குடிபெயரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை