உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓ.எம்.ஆரில் நீரோட்டத்திற்கு மாறாக வடிகால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

ஓ.எம்.ஆரில் நீரோட்டத்திற்கு மாறாக வடிகால் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

துரைப்பாக்கம் : மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை உள்ள, ஓ.எம்.ஆர்., ஆறு வழி சாலை 20 கி.மீ., துாரம், 135 அடி அகலம் உடையது. இது, 2008ல் பயன்பாட்டிற்கு வந்தது.சாலையின் குறுக்கே, 110 அடி நீளம், 8 அடி அகலம், 4 அடி ஆழத்தில், 30 இடங்களில் நீர்வழிப்பாதை உள்ளது. இதில் வடியும் மழைநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் வடிகால்கள் உள்ளன. இதை, சென்னை மாநகராட்சி மற்றும் நாவலுார் ஊராட்சி பராமரிக்கிறது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நீர்வழிப் பாதையில் இருந்து வடியும் மழைநீர், சதுப்பு நிலத்தில் சேரும் வகையில் உள்ள, பழைய வடிகாலை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குமுன், வி.பி.ஜி. அவென்யூ சாலைகள் வழியாக, ஒரு கோடி ரூபாயில், 900 மீட்டர் நீளம், 4 அடி அகலத்தில் வடிகால் கட்டப்பட்டது. இந்த வடிகால் ஓ.எம்.ஆரில் இருந்து துவங்கி சதுப்பு நிலத்தில் முடியவேண்டும். மாறாக, சதுப்பு நிலத்தில் இருந்து ஓ.எம்.ஆரில் முடியும் வகையில் கட்டப்பட்டது. இதில், ஓ.எம்.ஆர்., நீர்வழிப் பாதையில் இருந்து வடிகால், 1 அடி உயரமாக மாறியது.இதை ஆய்வு செய்த, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், 'இந்தவடிகாலில் மழைநீர்செல்லாது.மாறாக, மேட்டுக்குப்பம் ராஜிவ்நகர் முதல் வி.ஏ.ஓ., அலுவலகம் வரை, ஓ.எம்.ஆரில் வெள்ள பாதிப்பு ஏற்படும்' என கண்டறிந்தனர். இதையடுத்து, கட்டிய வடிகாலை உடைத்து விட்டு, முறையாக நீரோட்டம் பார்த்து கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக மறு மதிப்பீடு தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உடைக்க முடிவு செய்யப்பட்ட வடிகால் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணத்தை எப்படி ஈடு செய்வது என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் கலந்தாலோசித்து நீரோட்டம் பார்த்து மதிப்பீடு செய்யாதது, வடிகால் கட்டும்போது ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலட்சியம் போன்ற காரணத்தால், வடிகால் நீரோட்டம் இல்லாமல் கட்டப்பட்டது. இதனால், ஒரு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இந்த பணத்தை ஒப்பந்த நிறுவனம், அலட்சிய அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில அதிகாரிகள் செய்த தவறால், வடிகால் முறையாக கட்டவில்லை. இதனால், 30 மீட்டர் துாரம் தகர்த்துவிட்டு, 1 அடி நீரோட்டம் அமைத்து வடிகால் கட்ட வேண்டி உள்ளது. பணம் வீணானது தொடர்பாக, மேல் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ