அரசு, தொழிற்சாலை பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதுார்:நாவலுார் குடியிருப்பு - தாம்பரம் தடம் எண்:79ஏ, மாநகர பேருந்து, நேற்று, காலை 15க்கும் மேற்பட்ட பயணியருடன் தாம்பரம் சென்றது. பேருந்தை கூழாங்கல்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டினார்.பனப்பாக்கத்தில் இருந்து, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் எதிர் திசையில் வந்த மாநகர பேருந்து, வைப்பூர் சந்திப்பு அருகே, படப்பை செல்லும் பிரதான சாலையில் திரும்பியது.அப்போது, வாஜாபாத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, கட்டுபாட்டை இழந்து, மாநகர பேருந்து மீது மோதியது. இதையடுத்து, அதே லாரி, எறையூரில் இருந்து, தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி வந்த, தொழிற்சாலை பேருந்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.இதில், மாநகர பேருந்து மற்றும் தொழிற்சாலை பேருந்தில் பயணித்தவர்களில் 10 பேருக்கு, தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின்படி, ஒரகடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை மற்றும் மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.பின். ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அகற்றினர். இதனால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும், வட்டம்பாக்கம், பனப்பாக்கம், நாவலுார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் அரசு பேருந்து மற்றும் ஏராளமான தனியார் வாகனங்கள், படப்பை நோக்கி செல்ல, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் எதிர் திசையில் சென்று வருவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.எனவே, எதிர்திசையில் வரும் வாகனங்களை தடுத்து, பேரிகார்டு அமைத்து, போக்குவத்தை ஒழுங்குப்படுத்த, ஒரகடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.