வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி நகரில், நரேஷ்குமார், 35, என்பவர், மனைவி பாரதி, மகன், தாயார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.சென்னை வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தாயார் சாந்தகுமாரி உடல்நிலை சரியில்லாததால், கடந்த அக்.,28ம் தேதி காலை வீட்டை பூட்டிக் கொண்டு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கி தாயாருக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் அரவிந்த் பாண்டியன் என்பவர், நேற்று காலை, நரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, வீட்டருகே வசிக்கும் உறவினர் பாபு என்பவர், வீட்டுக்கு சென்று பார்த்த பின், வீட்டில் உள்ள நகை, பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.நரேஷ்குமார், காஞ்சிபுரம் வீட்டிற்கு நேற்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த 11.5 சவரன் தங்க நகைகளும், 25,000 ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.காஞ்சி தாலுகா போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.