விதிமீறிய 14 வாகனங்கள் சிறைபிடிப்பு ஒரே நாளில் ரூ.1.98 லட்சம் அபராதம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் விதி மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் வட்டார போக்குரவத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.இதில், தகுதி சான்று இல்லாமலும், அனுமதி சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்கள், ஒரு ஜே.சி.பி., இயந்திரம், தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட இரண்டு தனியார் கம்பெனி பேருந்துகள் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வாகனங்கள் பிடிக்கப்பட்டு, வட்டாரப் போக்கு அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட 14 வாகனங்களுக்கும் 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து சோதனை செய்து சிறைபிடிக்கப்படும் என, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.