காஞ்சிபுரம் வட்டாரத்தில் வயிற்றுப்போக்கு அரசு மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளான பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம், நேதாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 48 பேர் வயிற்றுபோக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 20 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.இதையடுத்து, 28 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 4 பேர் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதில் அனைவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏற்கனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பகுதிகளான பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு உள்ளிட்ட பகுதியில், புதிதாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று புதிதாக 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.இதில், நான்கு பேரும், திருக்காலிமேடு, சாலை தெரு, ரெட்டிபேட்டை, ஆலடிதோப்பு தெரு என, வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குடிநீரால் பாதிப்பு என்றால், வீட்டில் உள்ள அனைவருக்கோ அல்லது அப்பகுதி முழுதும் உள்ளவர்களுக்கோ வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.அவ்வாறு ஏற்படவில்லை.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியினருக்கு, குளோரினேஷன் செய்த குடிநீரை அனுப்புவதால், குடிநீர் வாயிலாக வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.இருப்பினும் மாநகராட்சி குடிநீரும், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஆர்.ஓ., கேன் குடிநீர் மாதிரி கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை ஆய்வுகுறித்த முடிவு தெரிய வரும்.வயிற்றுபோக்கு ஏற்படுவதை தவிர்க்க, மாநகராட்சி முழுதும், ஆட்டோ ஒலிப்பெருக்கி வாயிலாக, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஒரு வாரத்திற்கு தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.