ரூ.32.50 லட்சம் மோசடி மந்தைவெளி தம்பதி கைது
கூடுவாஞ்சேரி : செங்கல்பட்டு, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நேதாஜி தெரு ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 41. இவரிடம், சென்னை மந்தைவெளியில் எப்.எக்ஸ்.கன்சல்டன்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தும், மரியா லுாயிஸ் - பாத்திமா எழிலரசி ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.இதையடுத்து, கடந்தாண்டு மே மாதம் அருண்குமார், 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். மேலும், உறவினர்களிடம் கடன் வாங்கி 2.50 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.இதற்கான வட்டித் தொகையை, இரண்டு மாதங்கள் முறையாக செலுத்தியுள்ளனர். இதை நம்பிய அருண்குமார் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த 25 லட்சம் ரூபாயும் அவர்களிடம் கொடுத்துஉள்ளார்.அதன்பின் வட்டித்தொகை தரவில்லை. இது குறித்து மந்தைவெளி நிறுவனத்தில் சென்று விசாரித்தபோது, அலட்சியமாக பேசியுள்ளனர். மேலும், இன்று, நாளை வருமாறு அலைக்கழித்துள்ளனர்.கூடுவாஞ்சேரி போலீசில் அருண்குமார் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மோசடி தம்பதியை கைது செய்தனர்.