வெளிவட்ட சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
குன்றத்துார்:வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. முடிச்சூர், திருமுடிவாக்கம், குன்றத்துார், மலையம்பாக்கம், ஆகிய பகுதியில் உள்ள உணவங்களுக்கு செல்லும் கனரக வாகன ஓட்டுனர்கள், வெளிவட்ட சாலையோரம் வாகனத்தை நிறுத்துகின்றனர். இதனால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன், வெளிவட்ட சாலையில் வாகனங்களை நிறுத்தும் ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.