சேதமடைந்த சாலையால் இடையம்புதுாரில் விபத்து அபாயம்
உத்திரமேரூர்: இடையம்புதுாரில், சேதமடைந்துள்ள திருப்பலிவனம் -- சாலவாக்கம் சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த, இடையம்புதுார் கிராமத்தில், திருப்புலிவனம் -- சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே மருதம், வாடாதவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் சாலவாக்கம், செங்கல்பட்டுக்கு தினமும் சென்று வருகின்றனர். அதேபோல, சால வாக்கம், அன்னாத்துார், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் இருந்தும், உத்திர மேரூருக்கு தினமும் செல்கின்றனர். தற்போது, இச்சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது. மழை நேரங்களில் பள்ளங்களில் தேங்கும் தண்ணீரில் சிக்கி, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இடையம்புதுாரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ள னர்.