மின்கம்பங்களில் விளம்பர பதாகை காரணிதாங்கலில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:காரணிதாங்கலில், மின்கம்பங்களில், விளம்பர பதாகை வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுாரில் இருந்து, மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம் வழியாக, காஞ்சிபுரத்தை இணைக்கும், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, 34 கி.மீ., நீளம் கொண்டது.ஒரகடம் சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் நாள்தேறும் சென்று வருகின்றன.இந்த சாலையின் முக்கிய சந்திப்புகளில், உயர் கோபுர மின் கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில், காரணிதாங்கலில் உள்ள மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட், அரசியல் கட்சியின் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.இதனால், காற்று வேகமாக வீசும் போது, மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் கழன்று வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.