ஓரிக்கையில் இடிக்கப்பட்ட அ.தி.மு.க., கல்வெட்டு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கையில், அ.தி.மு.க., கல்வெட்டை நள்ளிரவில் இடித்து, மாநகராட்சி மற்றும் போலீசார் அகற்றினர்.தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து கல்வெட்டுகளையும் அகற்ற, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராமப்புறங்களிலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பொது இடங்களில் இருந்த கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில், வேகவதி ஆற்றையொட்டி, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 25 அடி உயரம் உள்ள அ.தி.மு.க., கல்வெட்டை, போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கனரக வாகனம் கொண்டு இடித்து அகற்றினர்.