100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கீடு...ரூ.70.80 கோடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10,000 பணிகள் தேர்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு, நடப்பாண்டில் 70.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 53 பணிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அரசின் தொகுப்பு வீடுகள், அங்கன்வாடி மையம் கட்டுதல், குளம் வெட்டுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கவுள்ளன.காஞ்சிபுரம், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதில் 1.70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 1.48 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.ஒரு வாரத்திற்கு, ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு நிதி ஆண்டும், 100 நாள் பணியாளர்களை பயன்படுத்தி செய்யப்படும் தொகுப்புவீடுகள் கட்டுதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட அரசின் கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமானம் அல்லாத பணிகளான குளம் வெட்டுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை தேர்வு செய்து வேலை செய்து வருகின்றனர்.கடந்த நிதி ஆண்டு, அங்கன்வாடி மையம், ஊராட்சி கட்டடம் உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளுக்கு, 124.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 2025- -26ம் நிதி ஆண்டிற்குரிய லேபர் பட்ஜெட் என, அழைக்கப்படும் பணி பட்டியலை, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் தேர்வு செய்து, இறுதிப்படுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10,053 பணிகளுக்கு, 70.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த நிதியை காட்டிலும், நடப்பாண்டிற்கு வழங்கப்பட்ட நிதி குறைவாக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு, சமீபத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நமது மாவட்டத்தில், 10,053 விதமான பணிகளுக்கு, 70.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, அந்தந்த வட்டாரங்களின் பணி தேவைகளுக்கு ஏற்ப பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பணிகளும், நிதி ஆண்டு முடிவதற்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.டெண்டர் அதிகாரம் ஊராட்சிக்கு வழங்கணும்இதுகுறித்து, காஞ்சிபுரம். ஊராட்சிகள் கூட்டமைப்பு தலைவர் அஜய்குமார் கூறியதாவது:ஊராட்சி பொது நிதி, 15வது மத்திய நிதிக்குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் டெண்டர் விடப்படுகிறது. பணிகள் நிறைவு பெற்றால், அந்தந்த ஊராட்சி தலைவர்களின் வாயிலாக நிதி விடுவிக்கப்படுகிறது.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மட்டும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்கிறது. ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை செலவிடப்படுகிறது. இருப்பினும், டெண்டரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் வாயிலாக விடப்படுகிறது. இதுபோன்ற பணிகளில் குறைபாடு ஏதேனும் கூறினால், ஒப்பந்தம் எடுத்தவர் சீரமைக்கவும், சரி செய்வதற்கும் செவி சாய்ப்பதில்லை. எனவே, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை அந்தந்த ஊராட்சிகளில் டெண்டர் விடுவதற்கு ஊரக வளர்ச்சி துறையினர் அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.