அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி இரண்டு துண்டாக உடைந்தது
காஞ்சிபுரம்: அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு லாரி இரு துண்டுகளாக உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதியில் இருந்து, சரக்கு ரயில் மூலமாக இரும்பு தகடு ரோல், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. நேற்று மதியம், 3:00 மணி அளவில், காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் இருந்து, அசோக் லே லாண்ட் சரக்கு லாரி மூலமாக, இரும்பு தகடு ரோல் ஏற்றிக்கொண்டு, சென்னை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் ஆகிய தொழிற்சாலை பகுதிக்கு செல்ல துவங்கியது. கிழக்கு ரயில் நிலையம் அருகே, அதிக பாரம் தாங்காமல் லாரி இரு துண்டுகளாக உடைந்து காஞ்சிபுரம்- - வையாவூர் சாலை நடுவே விழுந்து விட்டது. அதன் பின் ராட்சத கிரேன் மூலமாக, இரும்பு தகடு ரோல் அகற்றப்பட்டது. இதனால், காஞ்சிபுரம்-- வையாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.