அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரால் ஒரகடத்தில் சீர்கேடு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் இணையும் சந்திப்பில், ஒரகடம் அமைந்துள்ளது. இங்கு, உணவகம், வங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிறு குறு வணிக கடைகள் உள்ளன.இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நான்கு மாதங்களாக சாலையில் வடிந்து வருகிறது. அவை வங்கி செல்லும் சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது.அவ்வழியாக நடந்து வங்கிக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்து உள்ளது.அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.