உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு அறிவிப்பால் பட்டா கேட்டு விண்ணப்பங்கள் குவிகிறது! நீர்நிலைகளுக்கும் கேட்பதாக அதிகாரிகள் புலம்பல்

அரசு அறிவிப்பால் பட்டா கேட்டு விண்ணப்பங்கள் குவிகிறது! நீர்நிலைகளுக்கும் கேட்பதாக அதிகாரிகள் புலம்பல்

காஞ்சிபுரம்: நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு, வாரந்தோறும் 300 பேர் மனு அளிக்கின்றனர். அதிலும், மேய்க்கால், நீர்நிலைகளுக்கு பட்டா கேட்டு பலர் வருவதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில், 32 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதியை 'பெல்ட் ஏரியா' என, வருவாய் துறையினர் வரையறை செய்துள்ளனர்.இப்பகுதியில், அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்போருக்கு பட்டா வழங்காத நிலை இருந்தது. இந்நிலையில், ஆட்சேபனை இல்லாத அரசு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதாக, கடந்தாண்டு அரசு அறிவித்தது.இதையடுத்து, 'பெல்ட் ஏரியா'வில் ஆட்சேபனை இல்லாத இடங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போர் பற்றிய விபரங்கள் சர்வே எடுக்கப்பட்டன. தொடர்ந்து, அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான கருத்துருக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

4,087 பேர்

அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4,087 பேருக்கு, 'பெல்ட் ஏரியா'வில் பட்டா வழங்க பரிசீலனை செய்யப்பட்டது. இது தொடர்பாக பலரும், பட்டா கேட்டு மனு அளிப்போரின் எண்ணிக்கை, வருவாய் துறை அலுவலகங்களில் அதிகரித்து வருகிறது.இதற்கிடையே, நடப்பாண்டு மட்டும் 5 லட்சம் பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பட்டா கேட்டு மனு அளிப்போரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.அதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில், வாராந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் 500 மனுக்களில் 300 மனுக்கள் பட்டா கேட்டு கொடுக்கின்றனர். இதனால், வருவாய் துறை தொடர்பான மனுக்கள் மட்டும் வாரந்தோறும் குவிகின்றன.மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமல்லாமல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமிலும், மாதம் ஒருமுறை நடக்கும் மக்கள் தொடர்பு முகாமிலும் பட்டா கேட்டு ஏராளமானோர் மனு அளிக்கின்றனர்.அளிக்கப்படும் மனுக்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக விசாரணை நடத்தி, பயனாளியின் கோரிக்கை தொடர்பாக உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.நீர்நிலைகளுக்கும் பட்டா கேட்டு பலரும் விண்ணப்பிப்பதால், அது சம்பந்தமான கோப்புகளை ஆராய்ந்து முடிப்பதற்குள், பெரிதும் அவதி ஏற்படுகிறது.இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:'பெல்ட் ஏரியா'வில் பட்டா கொடுக்க, கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பட்டா கேட்டு மனு அளிப்பது அதிகரித்துள்ளது. மனுக்கள் மீது விசாரணை நடத்தி பரிசீலனை செய்யப்படுகிறது.

நில வகைப்பாடு

சென்னையைச் சுற்றியுள்ள, 'பெல்ட் ஏரியா'வில் மட்டும் 4,087 பேருக்கு பட்டா வழங்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில், ஆட்சேபனை இல்லாத கிராம நத்தம், கல்லாங்குத்து, பாரை, கரடு ஆகிய நில வகைப்பாடுகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க, 2,017 பேருக்கு பரிசீலனை செய்துள்ளோம். இவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்.அதேபோல, மயானம், வண்டிப்பாதை, தோப்பு, களம் ஆகிய நில வகைப்பாடுகளுக்கு இம்முறை பட்டா வழங்க தளர்வு செய்யப்பட்டுள்ளது.முன்பெல்லாம், இந்த நில வகைப்பாடுகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்தது. இம்முறை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டுள்ளது.இந்த நில வகைப்பாடு விபரங்கள் தெரியாமல், நீர்நிலை, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போர் பலர், பட்டா வழங்க கேட்டு மனு அளிக்கின்றனர். அவர்களின் கோரிக்கை விபரங்களை விசாரித்தால், நீர்நிலைக்கு பட்டா கேட்கின்றனர்.அதுபோல், நீர்நிலைகளுக்கு பட்டா வழங்க முடியாது. இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்வோருக்கு, படிப்படியாக பட்டா வழங்கப்படும்.அதிலும், பழங்குடியினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் போன்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து பட்டா வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !