வெளியூரிலிருந்து சென்னை திரும்ப 1,000 சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு
சென்னை, வெளியூரில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆயுத பூஜை பண்டிகை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறைக்காக, சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ரயில்களில் மட்டுமே, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே விடுமுறை முடிந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, நேற்று மாலை முதல் புறப்படத் துவங்கினர். இதற்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு சென்ற மக்கள், நேற்று மாலை முதல் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு மீண்டும் திரும்ப துவங்கி விட்டனர். இன்று மாலை முதல், அதிகளவில் பயணியர் வருவர். எனவே, பயணியர் வசதிக்காக, வெளியூரில் இருந்து சென்னைக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கோவை, திருப்பூர், பெங்களூருக்கு வழக்கமாக செல்லும் பேருந்துகளோடு, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணியர் தேவை அதிகரிக்கும்போது, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல், கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, 24 மணி நேரமும் மாநகர இணைப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.