உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.1.80 கோடி மதிப்பு நிலங்கள் அபகரித்த போலி வாரிசு கைது

ரூ.1.80 கோடி மதிப்பு நிலங்கள் அபகரித்த போலி வாரிசு கைது

சென்னை, விழுப்புரத்தைச் சேர்ந்தவர் வாசுகி. இவர், அமெரிக்காவில் ஐ.டி., துறையில் பணிபுரிகிறார். இவருக்கு, போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் 6,003 சதுரடி நிலம் உள்ளது. கடந்த 1997ல் பம்மல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்தார்.அதேபோல, அமெரிக்காவில் பணியாற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த செந்தாமரை என்பவரும், வாசுகி வாங்கிய அதே பகுதியில், 2,277 சதுரடி மனையை 1997ல் வாங்கியுள்ளார்.இவ்விரண்டு நிலங்களையும், வாசுகியும், செந்தாமரையும், 1997ல் வழங்கிய பொது அதிகாரத்தின் படி, திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிவபிரகாசம், 58, என்பவர் பாதுகாத்து வந்துள்ளார்.இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், இரண்டு மனைகளுக்கும் சிவபிரகாசம் வில்லங்க சான்று சரிபார்த்துள்ளார்.அப்போது, வாசுகி மற்றும் செந்தாமரைக்கு வாரிசுகள் இருப்பது போன்று, போலி வாரிசு மற்றும் சான்று தயாரித்தும், அவர்களின் பெயரில் மனையை செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்தது போன்றும் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போலி வாரிசுகள் மூலம் வேறு நபர்களுக்கு பம்மல் சார் - பதிவாளர் அலுவலகத்தில், கடந்தாண்டு கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.இது குறித்து, சிவபிரகாசம் ஆவடி மத்திய குற்றப்பிரிவின் நிலப்பிரச்னை தீர்வு பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்தும், போலியான ஆவணம் தயாரித்தும் நிலத்தை விற்பனை செய்தது உறுதியானது.இதுதொடர்பாக, போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த பாலவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 42, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், வாசுகியின் நிலத்தின் தற்போதைய மதிப்பு 1.20 கோடி ரூபாயாகும். அதேபோல, செந்தாமரையின் நிலத்தின் மதிப்பு 60 லட்ச ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ