சாகுபடிக்கு உகந்த வில்வ கரைசல்
வில்வ கரைசல் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெ.சுகுமார் கூறியதாவது: விளை நிலத்தில், அரை கீரை, சிறு கீரை, தண்டு கீரை, பருப்பு கீரை, புளிச்ச கீரை உள்ளிட்ட பல்வேறு விதமான கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். இதுதவிர, துாயமல்லி, மாப்பிள்ளை சம்பா ஆகிய பாரம்பரிய ரக நெல் வகைகளையும் சாகுபடி செய்கிறேன். அரிசி, காய்கறி ஆகிய விளைப்பொருட்களுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை. மாறாக, மண்புழு நீர் கரைசல், எருக்கு, பனம்பழம் உள்ளிட்ட கரைசல் தயாரித்து உபயோகப்படுத்தி வருகிறேன். அந்த வரிசையில், வில்வ கரைசலை தயாரித்து, விளைப்பொருட்களுக்கு பாசனமாகவும், தெளிப்பு நீராகவும் பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலமாக, மண்ணில் துவர்ப்பு தன்மை அதிகரித்து, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது. இந்த கரைசலை நாமே தயாரிக்க, 50 லிட்டர் தண்ணீரில் வில்ல காய் மற்றும் வீணாகும் வில்ல பழங்களை உடைத்து, அதன் சதை பகுதியை நீரில் ஊற வைக்க வேண்டும். இரண்டு கிலோ வெல்லம், ஒரு லிட்டர் மாட்டின் கோமியம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கரைக்கவும். இந்த கரைசலை, 15 நாட்களுக்கு பின் எடுத்து, பாசன நீரில் கலக்க வேண்டும். இலைகள், நெற்பயிர் மீதும் தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் போது, விளை நிலத்தில் இருக்கும் மண்ணில் துவர்ப்பு தன்மை அதிகரித்து நோய், பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தலாம். விவசாயிகளுக்கும் மகசூல் பாதிப்பு இருக்காது. மேலும், கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: – ஜெ.சுகுமார், 86680 52379.