லாரிக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கும் நெல் மூட்டைகள்
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டம்பாக்ம், வளையக்கரணை, நாவலுார், செரப்பனஞ்சேரி, நாட்டரசம்பட்டு, உமையாள்பரணசேரி, வடக்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், 10,000 ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்யப்படுகிறது.இங்கு, உமையாள்பரணசேரி மற்றும் வடக்குப்பட்டு ஆகிய இரண்டு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அறுவடை செய்த நெல், இரண்டு மாதங்களாக கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.உமையாள்பரணஞ்சேரி நெல் கொள் முதல் நிலையத்தில் 6,000 நெல் மூட்டைகளும், வடக்குப்பட்டு கொள்முதல் நிலையத்தில் 8,000 நெல் மூட்டைகளும், ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ளன.எனவே, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் பிடித்து வைக்கப் பட்டுள்ள நெல் மூட்டைகளை விரைவாக ஏற்றி சென்று, சேமிப்பு கிடங்கில் பத்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதவது:நெல் கொள்முதல் நிலையங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.விரைவாக அனைத்து மூட்டைகளும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.