உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் புற்றீசல் போல அதிகரித்து வரும் பேனர்கள் மக்களின் உயிருடன் விளையாடும் மாநகராட்சி அதிகாரிகள்

காஞ்சியில் புற்றீசல் போல அதிகரித்து வரும் பேனர்கள் மக்களின் உயிருடன் விளையாடும் மாநகராட்சி அதிகாரிகள்

காஞ்சிபுரம்:வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் சாலைகள் மற்றும் சந்திப்புகளில், பேனர் அமைக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, 'பிளக்ஸ் பேனர்கள், விளம்பர அட்டைகள் வைக்க. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் - வேலுார் சாலை, காஞ்சிபுரம் - அரக்கேணம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் விதிமீறல் பேனர்கள் புற்றீசல் போல முளைத்துள்ளன.இதில், குறிப்பாக காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் சிக்னல் அருகே, நான்குமுனை சந்திப்பும் அரசியல் கட்சி விளம்பரங்களும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் இடமாகவும் மாறியுள்ளது.மேலும், விளக்கடி கோவில் தெரு, காமராஜர் வீதி, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜவீதி, பேருந்து நிலையம் என, முக்கிய பகுதிகளில் உயரமான கட்டடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சத விளம்பர பேனர்கள், பலத்த காற்று வீசும்போது சரிந்து விழுந்தால், பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.உயரமான கட்டடங்கள் மற்றும் சாலையோரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.விதிமீறல் பேனர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காஞ்சிபுரத்தில் விதிமீறல் பேனர்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.எனவே, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்து ஏற்படுத்தும் வகையிலும், உயரமான கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள விதிமீறல் பேனர்களை உடனடியாக, மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார்

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.ஒரகடம், வல்லம் -- வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் உள்ள மின்கம்பங்களில், தனியார் வீட்டு மனை விற்பனை குறித்த சிறிய அளவிளான விளம்பர பதாகைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்புவதால், விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.மேலும், வேகமாக காற்று வீசும் போது விளம்பர பதாகைகள், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை